‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’-ஐப் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் உண்மைகள்

‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்துகளைப் பற்றிய தவறான தகவல்கள்

தவறான தகவல்: ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்துகள் ஆபத்தானவை, மற்றும் வெளிநாடுகளில் இதை இட்டுக்கொண்டவர்கள் பாரதூரமான எதிர் விளைவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

உண்மை: ‘மருத்துவ-சிகிச்சைச் சரக்குகள் நிர்வாகம்’ (Therapeutic Goods Administration) எனும் அமைப்பானது ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்காகத் தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பாதுகாப்பிற்காக அனைத்துத் தடுப்பூசி மருந்துகளும் முற்றிலுமாய்ச் சோதிக்கப்படுகின்றன. ‘மருத்துவ-சோதனை முயற்சி’(clinical trial)களில் இருந்து பெறப்பட்ட தரவுகள், ஆக்கக்-கூறுகள், இரசாயனம், உற்பத்தி மற்றும் இதர கூறுகள் ஆகியவற்றின் கவனமான பகுப்பாய்வினை இது உள்ளடக்குகிறது. https://www.tga.gov.au/covid-19-vaccines எனும் TGA -யினது வலைத்தலப் பக்கத்தில் ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்துகளைப் பற்றிய தகவல்களைக் காணலாம்.

‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்துகளின் ஒவ்வொரு தொகுதியையும் மதிப்பீடு செய்வதற்கும் மேலாக, ஆஸ்திரேலியாவில் அவை விநியோகிக்கப்பட்ட பிறகு, ‘மருத்துவ-சிகிச்சைச் சரக்குகள் நிர்வாகம்’ (Therapeutic Goods Administration) பாதுகாப்பிற்காக அவற்றைக் கண்காணித்து வருகிறது. ஐக்கிய ராச்சியம் (UK), ஜெர்மனி மற்றும் நார்வே ஆகியவற்றை உள்ளடக்கிய வெளிநாடுகளில் நடந்துவரும் தடுப்பூசி மருந்தளிப்புத் திட்டங்களையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் உன்னிப்பாய்க் கண்காணித்துவருகிறது. பாதுகாப்பான மற்றும் செயலூக்கம் மிக்க ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்து ஆஸ்திரேலியர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த இந்தத் தகவல்கள் அனைத்தும் உதவும்.

தடுப்பூசி மருந்து ஒன்றின் காரணமாகப் பக்க விளைவு ஒன்று உங்களுக்கு ஏற்பட்டே ஆகிறது என்றால், சுகாதாரத் தொழிலர் ஒருவரிடமிருந்து உதவி நாடுங்கள் மற்றும் அதை ‘மருத்துவ-சிகிச்சைச் சரக்குகள் நிர்வாக’(Therapeutic Goods Administration)த்திற்குத் தெரியப்படுத்துங்கள்    1300 134 237).

தவறான தகவல்: ‘கோவிட்-19’-இல் இருந்து இறப்பவர்களை விட, தடுப்பூசி மருந்தின் எதிர்முகமான பக்க விளைவுகளிலிருந்து இதை விட அதிகமானவர்கள் இறப்பார்கள்.

உண்மை: எவ்வொரு தடுப்பூசி மருந்தும் மிதமான சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தடுப்பூசி உங்களுக்கு இடப்பட்ட இடத்தில் சிறிது நோவு, சிவந்துபோதல் அல்லது வீக்கம், தலைவலி அல்லது இலேசான சுரம் அல்லது அசதி ஆகியன தடுப்பூசிகளினால் ஏற்படும் பிரதானமான பக்க விளைவுகளாகும். இவற்றில் பெரும்பாலானவற்றை மிதமான சில வலி நிவாரணிகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம், மற்றும் இவை அச்சப்படுவதற்கான காரணங்கள் அல்ல.

பாதுகாப்பும், செயலூக்கமும் இல்லாத தடுப்பூசி மருந்து ஒன்றினை ஆஸ்திரேலிய மருந்துகள் ஒழுங்குறுத்துநரான ‘மருத்துவ-சிகிச்சைச் சரக்குகள் நிர்வாகம்’ (Therapeutic Goods Administration) அங்கீகரிக்காது. இந்த அமைப்பினர் மிக உன்னிப்பாக அவதானித்துவரும் விடயங்களில் பாரதூரமான பக்க விளைவுகள் ஒன்றாகும்.

உலகிலேயே மிகச் சிறந்த அங்கீகரிப்பு செயல்பாட்டு-முறைகளில் ஒன்றை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது, மற்றும் பாரதூரமான எதிர்முகப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எவ்வொரு மருந்திற்கும் இந்த நாட்டில் அங்கீகாரம் அளிக்கப்படாது. அங்கீகாரம் அளிப்பதோடு மட்டும் ‘TGA’ -யினது பணி நின்றுவிடவில்லை. வெளிநாடுகளிலிருந்தும், இங்கு நடைபெற்றுவரும் தடுப்பு மருந்து விநியோகத்திலிருந்தும் பெறப்படும் தரவுகளின் மீதும் இவர்கள் உன்னிப்பாய் ஒரு கண் வைத்துவருகிறார்கள். சந்தேகத்திற்கிடமான எதுவுமே விட்டுவைக்கப்படுவதில்லை.  

தடுப்பூசி மருந்து ஒன்றின் காரணமாகப் பக்க விளைவு ஒன்று உங்களுக்கு ஏற்பட்டே ஆகிறது என்றால், சுகாதாரத் தொழிலர் ஒருவரிடமிருந்து உதவி நாடுங்கள் மற்றும் அதை ‘மருத்துவ-சிகிச்சைச் சரக்குகள் நிர்வாக’(Therapeutic Goods Administration)த்திற்குத் தெரியப்படுத்துங்கள்    1300 134 237).

தவறான தகவல்: உங்களுடைய ‘DNA’-யைத் திரட்டுவதற்கு/மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தடுப்பூசி மருந்து விநியோகத் திட்டத்தினை ஒரு மறைப்பாகப் பயன்படுத்துகிறது.

உண்மை: தடுப்பூசி மருந்துகள் உங்களுடைய உடலுக்குள் செலுத்தப்படுகின்றன, அவை உங்களுடைய உடலிலிருந்து எதையும் அகற்றுவதில்லை, மற்றும் அவை உங்களுடைய ‘DNA’ -யை மாற்றியமைப்பதில்லை. ‘கோவிட்-19’-இற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள உங்களுடைய உடலுக்கு அறிவுறுத்துவதற்காக, ‘செய்தியாள் RNA’ (Messenger RNA (mRNA)) என்பதன் ஒரு துணுக்கை புதிய ‘கோவிட்-19’ தடுப்பூசிகளில் சில பயன்படுத்துகின்றன. இந்த ‘mRNA’ உங்களுடைய ‘DNA’ -யிற்கு எதுவும் செய்வதில்லை.

தவறான தகவல்: இந்த வைரஸ் அதி வேகத்தில் உரு-மாறிக்கொண்டிருப்பதால் தடுப்பூசி மருந்து ஒன்று எப்போதுமே செயல்படாது.

உண்மை: எல்லா வைரஸ்-களுமே உரு-மாறும். அவற்றின் இயற்கையான பரிணாமத்தின் ஒரு அங்கமாகும் இது, மற்றும் ‘கோவிட்-19’  வித்தியாசமானதல்ல. ஆதாரங்களின் அடிப்படையில், புதிய திரிபுகளுக்கு எதிராக ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்துகள் இப்போதும் செயலூக்கம் உள்ளவையாக இருக்கும்.

சளிச்-சுர(flu)த்திற்கு இருப்பதைப் போல, ஊக்க ஊசிகளை  அல்லது மீண்டும் தடுப்பூசி மருந்துகளை இட்டுக்கொள்ள வேண்டிய தேவை மக்களுக்கு இருக்கலாம் என்பது இதன் அர்த்தமாகலாம். ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்காகத் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் ‘கோவிட்-19’-இல் இருந்து பாரதூரமாக நோய்வாய்ப்படுவதைத் தடுப்பதில் அதியுயர் செயலூக்கம் உள்ளவை என்பதைக் காண்பித்துள்ளன.

தவறான தகவல்: ‘கோவிட்-19’ ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களுக்குத் தடுப்பூசி மருந்து இட்டுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

உண்மை: ‘கோவிட்-19’ ஏற்பட்டதன் காரணமாகக் கிடைக்கும் பாதுகாப்பு ஆளுக்கு ஆள் மாறுபடும். இது ஒரு புதிய வைரஸ் என்பதால், இயற்கையான நோயெதிர்ப்புத் திறன் எதுவும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஏற்கனவே உங்களுக்குக் ‘கோவிட்-19’ ஏற்பட்டிருந்தாலும்,  உங்களால் இயலும்போது இப்போதும் நீங்கள் ‘கோவிட்-19’  தடுப்பூசி மருந்தினை இட்டுக்கொள்ள வேண்டும்.

தவறான தகவல்: ‘கோவிட்-19’  தடுப்பூசி மருந்தில் கண்காணிப்பிற்கான மென்பொருள்/மைக்ரோ-சிப்-புகள் உள்ளன.

உண்மை: ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்துகள் எதிலும் மென்பொருட்கள்/மைக்ரோ-சிப்-புகள் இல்லை.

‘கோவிட்-19’-ஐப் பற்றிய மற்ற தவறான தகவல்கள்

தவறான தகவல்: குழந்தைகள் ‘கோவிட்-19’ தொற்றினை ‘அதிவிரைவில் பரப்புவார்கள்’

உண்மை: சளிச்ச்சுரம் போன்ற நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளைக் குழந்தைகள் அதிவேகமாகப் பரப்புவார்கள் என்று அறியப்பட்டாலும், பாடசாலைகளில் ஒரு குழந்தையிடம் இருந்து இன்னொரு குழந்தைக்குக் ‘கோவிட்-19’ பொதுவாகப் பரவுவது இல்லை என்று தற்போதைய ‘கோவிட்-19’ சான்றுகள் குறிகாட்டுகின்றன. மேலும், இளம் குழந்தைகளிடையே இந்தத் தொற்று பெருமளவில் பரவியிருக்கிறது என்பதைக் காண்பிக்கும் தகவல்கள் உலகில் எங்குமே இல்லை. இதற்கான சாத்தியம் இருந்தாலும், ‘கோவிட்-19’ நோயை ஏற்படுத்தும் வைரஸ்-ஐக் குழந்தைகள் அதிவேகமாகப் பரப்புபவர்கள் அல்ல என்று தற்போதைய ஆதாரங்கள் குறிகாட்டுகின்றன. 

தவறான தகவல்: போதுமான அளவிற்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் (செயற்கை சுவாச சாதனங்கள், முகக் கவசங்கள் மற்றும் நோயறிவுச் சோதனைக் கருவிகள்) ஆகியவற்றை ஆஸ்திரேலியாவினால் பெற இயலாது

உண்மை: நோய்ப் பரவலின் உயர்ச்சியைக் காண்பிக்கும் வரைபடக் கோட்டினைத் தட்டையாக்குவதில் ஆஸ்திரேலியா பெரும் வெற்றியைக் கண்டுள்ளது. நமது மருத்துவமனைகளின் மீதான அழுத்தம் அதிகரிப்பதை நாம் தவிர்த்துள்ளோம் என்பதை இது குறிக்கும்.

சரீரப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆஸ்திரேலியாவில் தாராளமாகக் கிடைக்கின்றன, மற்றும் இன்னும் அதியளவிலான உபகரணங்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றன. உதாரணத்திற்கு, ‘தேசிய மருத்துவக் கிடங்’(National Medical Stockpile)கில் அதியளவு இருப்புகள்  உள்ளன, மற்றும் 2021-ஆம் ஆண்டில் அவ்வப்போதான இடைவெளிகளில் வினியோகிக்கப்படுவதற்காக 500 மில்லியன் முகக் கவசங்கள் தயாரிப்பதற்கான உத்தரவு இதனால் இடப்பட்டுள்ளது.

நமது பொது சுகாதாரத் துறையின் ‘கோவிட்-19’ பெருந்தொற்று எதிர்-நடவடிக்கைக்கு ஆதரவுதவியளிப்பதற்காக அத்தியாவசிய நோயறிவுச் சோதனைகள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, ‘ ஆஸ்திரேலிய தொற்றுநோய்த் தொடர்புவலை’ (Communicable Diseases Network Australia) மற்றும் ‘பொது சுகாதார ஆய்வுக்கூடத் தொடர்புவலை’ (Public Health Laboratory Network) ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிவுரைக் குழுக்கள் ‘கோவிட்-19’ நோயறிவுச் சோதனைகளைப் பற்றிய தேவைப்பாடுகளை மீள்மதிப்பீடு செய்வதற்காக அடிக்கடி சந்திப்புகளை மேற்கொண்டுவருகின்றன.

தவறான தகவல்: ‘கோவிட்-19’-இன் காரணமாக ஏற்படும் அதிகரிக்கும் தேவைகளை ஆஸ்திரேலிய மருத்துவமனைகளால் சமாளிக்க இயலாது

உண்மை: நோய்ப் பரவலின் உயர்ச்சியைக் காண்பிக்கும் வரைபடக் கோட்டினைத் தட்டையாக்குவதில் ஆஸ்திரேலியா பெரும் வெற்றியைக் கண்டுள்ளது. நமது மருத்துவமனைகளின் மீதான அழுத்தம் அதிகரிப்பதை நாம் தவிர்த்துள்ளோம் என்பதை இது காண்பித்திருக்கிறது. தேவைப்பட்டால், ‘கோவிட்-19’ பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்படும் கூடுதல் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஆயத்தமாக உள்ள உலகத் தரம் வாய்ந்த சுகாதார முறைமையை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசு, மாநில மற்றும் எல்லைப்பகுதி அரசுகள் மற்றும் தனியார் சுகாதாரத் துறை ஆகியவற்றின் இடையேயான ஒத்துழைப்பின் மூலமாக கூடுதல் மருத்துவமனைப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பெறும் திறனும் இதில் உள்ளடங்கும்.

தவறான தகவல்: இரண்டு வார கால முழுஅடைப்பு ஒன்று ‘கோவிட்-19’-இன் பரவலை நிறுத்திவிடும்

உண்மை: இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய பிறகு அவற்றை எடுத்துவிட்டு வழக்கமான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவது ‘கோவிட்-19’-இன் பரவலை நிறுத்தாது.

‘கோவிட்-19’ உள்ள பெரும்பாலானவர்களுக்கு மிதமான நோயறிகளே இருக்கும், அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கும். இரண்டு வார காலத்திற்கு மட்டுமான முழுஅடைப்பினால் ஏற்படும் ஆபத்து என்னவெனில், முழுஅடைப்பிற்குப் பிறகு வழமையான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பும்போது நோயறிகுறிகள் இல்லாத ‘கோவிட்-19’ தொற்று உள்ளவர்கள் தம்மையறியாமல் இந்த வைரஸ்-ஐ மற்றவர்களுக்குப் பரப்பக்கூடும்.

நல்ல கைச் சுகாதார மற்றும் சுவாசச் சுகாதாரப் பழக்கங்களையும், உடல்ரீதி விலகலையும் பின்பற்றுதல், உங்களுக்கு சுகவீனம் என்றால் வீட்டிலேயே இருத்தல் மற்றும் நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளல், சமூகத் தொற்றுப் பரவல் இருக்கும் இடங்களில் நீங்கள் இருக்கும்போதும்,, உடல்ரீதி விலகலைப் பின்பற்றுவது சிரமமாக இருக்கும்போதும் முகக் கவசம் ஒன்றை அணிதல் ஆகிய காரியங்களைச் செய்வது ‘கோவிட்-19’ பரவல் வேகத்தைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகளையும், தொற்றுப் பரவல் எந்த இடங்களில் ஏற்படுகிறது என்பதையும் நமது வல்லுனர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். பிறகு, கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய புதிய விதிமுறைகள் அல்லது கட்டுப்பாடுகளைப் பற்றிய சிபாரிசுகளை அவர்கள் செய்வார்கள். www.australia.gov.au எனும் வலைத்தலத்திற்குச் செல்வதன் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் என்ன என்பதை ஒவ்வொருவரும் அவ்வப்போது தெரிந்துகொள்ளவேண்டும்.

தவறான தகவல்: ஒவ்வொருவருக்கும் நோயறிவுச் சோதனையை அளிப்பது ‘கொரோனாவைரஸ்’-இன் பரவலை நிறுத்தும்

உண்மை: நோயறிவுச் சோதனையை அளிப்பது ‘கொரோனாவைரஸ்’-இன் பரவலை நிறுத்தாது.

தக்க நேரத்திலும், திட்டமிடப்பட்டதை விட அதியளவில் அளிக்கப்படக்கூடியதும் மற்றும் துல்லியமானதுமான நோயறிவுச் சோதனைகள் ‘கோவிட்-19’—ஐத் தடுத்து அதைக் கட்டுப்படுத்தும் செயல்பாட்டுமுறைகளின் அடிப்படைத் தூண்களாகும். நோயின் தொற்றுத்தன்மையை வரையறுப்பதிலும்,  தொற்று உள்ளவர்கள் மற்றும் தொற்று உள்ளவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைப் பராமரிப்பது பற்றிய அறிவினை வளர்த்துக்கொள்வதிலும், இறுதியாக வைரஸ் பரவலைக் குறைப்பதிலும் நோயறிவுச் சோதனைகள் முக்கியமானதொரு பங்கினை வகிக்கின்றன.

இருந்தாலும், உங்களுக்குக் ‘கோவிட்-19’ தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் கூறினாலும் உங்களுக்கு ஆபத்து இல்லை என்றோ, உங்களால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை என்றோ அர்த்தமில்லை. ‘சார்ஸ்-கோவ்-2’ (இதுவே கோவிட்-19’-ஐ ஏற்படுத்தும் வைரஸ் ஆகும்) தொற்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம், ஆனாலும், நோயறிகுறிகள் உங்களுக்குத் துவங்குவதற்கு முன்பாக ‘கோவிட்-19’ உங்களுக்கு இல்லை என்று சோதனை முடிவுகள் சொல்லலாம். ஆகவேதான், நல்ல சுகாதாரப் பழக்கங்கள் மற்றும் உடல்ரீதி விலகலைப் பின்பற்றுவதும், சுகவீனமாக இருக்கும்போது வீட்டிலேயே இருப்பதும் மிக முக்கியமானதாகிறது. இந்த நடவடிக்கைகளும், இலக்கு வைத்து நடத்தப்படும் சோதனகளும் ‘கோவிட்-19’ மற்றும் இதர தொற்று நோய்களின் பரவலைத் தடுப்பதில் உதவுகிறது, மற்றும் ஆஸ்திரேலிய சுகாதார முறைமையின் மீது ஏற்படும் அழுத்தத்தினைக் குறைக்கிறது.

அதிகரிக்கும் நோய்த்தொற்றுகளையும், ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் திடீர்ப்பரவல்களையும் பொது சுகாதார முறைமையின் மூலம் வெற்றிகரமாக நிர்வகிக்கவேண்டுமெனில், தொற்றுக் கட்டுப்பாட்டு நிர்வாகம் மற்றும் ஆய்வுக்கூடங்கள் மற்றும் சோதனை நிலையங்களின் தாங்கு-திறனைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கிடையே சரியானதொரு சமநிலை பேணப்படுவதற்கு சோதனைகளைக் கவனமான முறையில் இலக்குவைத்து செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது.

நோயறிகுறிகள் ஏதும் இல்லாத (asymptomatic) ஆஸ்திரேலியர்களைப் பரந்த அளவில் சோதிக்கவேண்டிய தேவையில்லை என்று வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. நோய்த்தொற்றுப் பரவலை அடையாளம் காண்பதற்கு இது தொற்றுநோயியல் ரீதியாக வலுவான ஒரு யுக்தி அல்ல, மற்றும் இது செலவு ரீதியாகவும் செயலூக்கமான அணுகுமுறை அல்ல.  நோய்க் கட்டுப்பாடு மற்று கண்காணிப்புக் காரணங்களுக்காக நோயறிகுறிகள் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும் சோதனைகளுக்குக் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் ஒரு பங்கு இருக்கக்கூடும் என்பதை ஆஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகரிக்கிறது. திடீர்ப்பரவல்கள் ஏற்படும் சூழல்கள், அதியுயர் பரவல் ஆபத்து உள்ள இடங்களில் வாழும் மக்கள் மற்றும் குறைவான பரவல் ஆபத்து உள்ள பகுதிகள், தொற்று ஏற்பட்டால் தீவிர நோய்க்கு ஆளாகக்கூடிய ஆபத்து கணிசமான அளவில் உள்ள மக்கள் வாழும் இடங்கள் ஆகியன இந்த சூழல்களில் உள்ளடங்கும்.

நோயறிகுறிகள் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும் சோதனைகளை உள்ளடக்கிய சோதனை யுக்திகளைத் தகுந்த பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆய்வுக்கூட மேலாளர்களுடன் கலந்துரையாடி உருவாக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்து பரிந்துரை செய்துவருகிறது. மிகத் தகுந்த மற்றும் மிகவும் செயலூக்கமான அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். நோயறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மிகப் பரவலாக அளிக்கப்படும் சோதனைகளைப் பற்றிய ஆஸ்திரேலிய அரசினது நிலைப்பாட்டினைப் பற்றிய தகவல்களுக்கு ‘சுகாதாரத் திணைக்கள’(Department of Health website)த்தின் வலைத்தலத்தினைப் பாருங்கள்.

தவறான தகவல்: நோயறிவுச் சோதனைக் கருவிகள் துல்லியமானவை அல்ல

உண்மை: ஆஸ்திரேலியாவில், ‘கோவிட்-19’ சோதனைகள் மிகத் துல்லியமானவை. ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து சோதனை முறைகளின் நம்பகத்தன்மை விலாவரியான முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘சிகிச்சை உற்பத்திப்பொருள் நிர்வாகம்’ (Therapeutic Goods Administration (TGA))‘ எனும் அமைப்பினாலும், ‘சார்ஸ்-கோவ்-2’ (கோவிட்-19’-ஐ ஏற்படுத்தும் வைரஸ்)-இற்காகக் குறிப்பாக உருவாக்கப்பட்டுள்ள தர-உறுதித் திட்டங்களில் கொள்ளப்படும் கட்டாயப் பங்கேற்பின் மூலமாகவும் இந்த சோதனை முறைகள் உன்னிப்பாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

ஆஸ்திரேலியாவில், சோதனைக்கூடங்களை அடிப்படையாகக் கொண்ட ‘போலிமெரேஸ் தொடர் எதிர்வினை சோதனை’ (polymerase chain reaction testing (PCR)) என்பது உங்களுடைய உடலில் ஏற்பட்டுள்ள தீவிர ‘சார்ஸ்-கோவ்-2’ தொற்றினைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் மிகத் துல்லியமான ‘தங்கத்-தர-சோதனை’(gold standard test)யாகும். இந்த சோதனையைச் செய்வதற்கு சுவாசப் பாதையில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்க வேண்டியிருக்கும். இந்த ‘பி.சி.ஆர்’ (PCR) சோதனைகளின் அறிந்துணர்-திறன் மிக அதிகம், மற்றும் இவை சுவாசப் பாதைஇலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலுள்ள ‘சார்ஸ்-கோவ்-2’ வைரஸ்-இற்கு உரித்தான மிக நுண்ணிய மரபணுத் துகள்களைக் கண்டுபிடித்துவிடும்.

சோதனை முடிவுகளின் தரம் மற்றும் நமபகத்தன்மையை உறுதிப்படுத்தவும்,  சோதனைத் தொழில்நுட்பத்தை சட்டப்படி வினியோகிக்க ஏது செய்யும் வகையிலும், ஆஸ்திரேலியாவிற்குப் புதிதான எவ்வொரு சோதனைத் தொழில் நுட்பமும் ‘டி.ஜி.ஏ’ (TGA)-யினால் மிகக் கவனமாக மதிப்பீடு செய்யப்படவேண்டியிருக்கிறது. ‘ஆஸ்திரேலிய சிகிச்சை உற்பத்திப்பொருள் பதிவே’(Australian Register of Therapeutic Goods)ட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘கோவிட்-19’ சோதனைகளைப் பற்றிய நடப்பு-நாள் வரைக்குமான தகவல்களைக் காண https://www.tga.gov.au/covid-19-test-kits-included-artg-legal-supply-australia எனும் ‘டி.ஜி.ஏ’ (TGA)-யினது வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

தவறான தகவல்: ‘கோரோனா வைரஸ்’ ஒரு வதந்தி

உண்மை: பெரும் வைரஸ் குடும்பம் ஒன்றின் ஒரு பகுதியான ‘கொரோனா வைரஸ்’ (சார்ஸ்-கோவ்-2) -இனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளிடையே சுவாசத் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய கோவிட்-19’ தொற்று ஏற்படுத்தப்படுகிறது. சாதாரண சளியில் இருந்து அதி தீவிர நோய்கள் வரை இந்தத் தொற்றுகளின் வீச்சு இருக்கும். திரவத் துகள்கள் மற்றும் கிருமித்தொற்று படிந்துள்ள பரப்புகள் ஆகியவற்றின் மூலமாக ‘கோவிட்-19’ சனங்களிடையே பரவுகிறது.

ஆஸ்திரேலியாவில், ‘பீட்டர் டோஹெர்ட்டி நோய்த்தொற்று மற்றும் நோயெதிர்ப்புத்திறன் நிறுவன’(Peter Doherty Institute for Infection and Immunity)த்தில் அமைந்துள்ள ‘விக்டோரிய தொற்று நோய் ஆய்வுக்கூடம்’ (Victorian Infectious Diseases Reference Laboratory (VIDRL)) சீனா-விற்கு அடுத்து ‘சார்ஸ்-கோவ்-2’ வைரஸ்-ஐத் தனிப்படுத்திக் கண்டறிந்த முதல் ஆய்வுக்கூடமாகும். ‘கோவிட்-19’ நோயறிவுச் சோதனைகளை உருவாக்கவும் அவற்றைச் செல்லத்தக்கதென உறுதிப்படுத்தவும் ஏது செய்வதற்காக, இந்தத் தனிப்படுத்தப்பட்ட வைரஸ்-ஐ மற்ற ஆஸ்திரேலிய ஆய்வுக்கூடங்களுடனும், ‘உலக சுகாதார அமைப்’புடனும், இதர நாடுகளுடனும் ‘வி.ஐ.டி.ஆர்.எல்’ (VIDRL) பகிர்ந்துகொண்டது.

‘சார்ஸ்-கோவ்-2’ வைரஸ்-ஐக் கண்டுபிடித்து உறுதிப்படுத்துவதற்கான திறனையும் தக்க அங்கீகாரத்தினையும் பெற்றுள்ள அரச மற்றும் தனியார் நோயியல் ஆய்வுக்கூடங்களின் வல்லுனத் தொடர்புவலையின் ஆதரவுதவியைப் பெறும் பாக்கியத்தினை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்த நோய்த்தொற்றின் அதிகரிப்பைக் காண்பிக்கும் வளைவுக்கோட்டினைத் தட்டையாக்குவதிலும், மற்ற நாடுகளில் காணப்பட்ட பேரழிவுத் தொற்று வீதங்களைத் தவிர்ப்பதிலும் ஆஸ்திரேலியா கண்டுள்ள வெற்றிக்கு இந்த ஆய்வுக்கூடங்களின் அதியுயர் சோதனைத் திறன் மையமாக இருந்துள்ளது. ‘கோவிட்-19’ தொற்று உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் இந்தத் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பற்றிய விபரங்கள் ஆஸ்திரேலியாவிலும், உலகளாவிய விதத்திலும் திரட்டப்பட்டுவருகின்றன. இந்தத் தரவுகள் ‘ஆஸ்திரேலிய சுகாதாரத் திணைக்கள’(Australian Department of Health)த்தினால் தினந்தோறும் வெளியிடப்படுகின்றன.

தவறான தகவல்: முகக் கவசங்கள் செயலூக்கம் அற்றவை மற்றும்/அல்லது பாதுகாப்பு அற்றவை

உண்மை: நல்ல சுகாதாரப் பழக்கங்கள், உடல்ரீதி விலகல் மற்றும் சுகவீனமாக இருக்கும்போது வீட்டிலேயே இருத்தல் மற்றும் நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளல் ஆகிய மற்ற முன்னெச்சரிக்கைகளோடு பாவிக்கும்போது முகக் கவசங்கள் ‘கோவிட்-19’-இன் பரவலைக் குறைப்பதில் உதவும்.

பெரும்பான்மையான சுவாசம் சம்பந்தப்பட்ட வைரஸுகளைப் போல, ‘சார்ஸ்-கோவ்-2’  (‘கோவிட்-19’-ஐ ஏற்படுத்தும் வைரஸ்) எனும் இந்த வைரஸும்  தொற்று ஏற்பட்டுள்ள ஒரு நபர் பேசும்போது, இருமும்போது அல்லது தும்மும்போது வெளிப்படும்  வைரஸுகளைக் கொண்டுள்ள திரவத் துகள்களின் மூலமாகப் பிரதானமாகப் பரவுகிறது. வைரஸுகள் படிந்துள்ள பரப்புகளின் மூலமாகவும் பரவல்கள் ஏற்படலாம். தொற்று உள்ள சுவாச திரவத் துகள்களின் பரவலைக் குறைப்பதன் மூலம் மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக, ‘கோவிட்-19’-ஐ உள்ளடக்கிய சுவாச வைரஸ் தொற்று உள்ள நபர் ஒருவரால் முகக் கவசம் ஒன்று பயன்படுத்தப்படலாம். ‘கோவிட்-19’-ஐ உள்ளடக்கிய சுவாச வைரஸ் தொற்று உள்ள நபர் ஒருவரிடமிருந்து உடல்ரீதியாக விலகியிருக்க இயலாத சுகாதார மற்றும் பராமரிப்பு சேவகர்களால் அவர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக முகக் கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முகக் கவசம் ஒன்றை அணிவது ‘கோவிட்-19’-இன் பரவலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்று மட்டுமேயாகும், மற்றும் இது இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒரு மாற்றாக அமையாது. நல்ல கை சுகாதார மற்றும் சுவாச சுகாதாரப் பழக்கங்கள் மற்றும் உடல்ரீதி விலகலைப் பின்பற்றுவது, சுகவீனமாக இருக்கும்போது வீட்டிலேயே இருந்துகொண்டு நோயறிவுச் சோதனையை மேற்கொள்வது ஆகிய காரியங்களை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டியது முக்கியம்.

முகக் கவசம் ஒன்றை அணிவது பாதுகாப்பற்றது, அல்லது பிராண வாயுக் குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு இது இட்டுச்செல்லக்கூடும் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. இப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் பல ஆண்டுகளாக சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குனர்கள் நீண்ட நேரங்களுக்கு முகக் கவசங்களை அணிந்துவந்திருக்கின்றனர்.

 

‘கோவிட்-19’ நோய்த்தொற்றிற்கு எதிராக ஆஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முக்கியமான புதிய விடயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த வலைத்தலத்தினைத் தவறாமல் பார்த்துக்கொண்டிருங்கள்.

‘கோவிட்-19’-ஐப் பற்றி உங்களுடைய மொழியிலுள்ள பலவகைப்பட்ட தகவல்களையும் SBS கொண்டுள்ளது. அரசாங்கம் அளிக்கும் தகவல்களை மொழிபெயர்ப்பதற்காக ‘வலையுலா நீட்டிப்பு’(browser extension)க்களையும், ‘செல்பேசிச் செயலி’(mobile phone apps)களையும் நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுடைய தேவைக்கேற்ற ஒன்றைக் கண்டறிவதற்கான தேடலை மேற்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்திலுள்ள கூடுதல் தகவல்களைப் பெற, www.australia.gov.au எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள்.